
“நீரின்றி அமையாது உலகு”
இந்த உலகை ஆக்கும் உயிர்களின் நிலவுகைக்கு நீரின் தேவைப்பாடு என்பது வெளிப்படையாக தெரிந்த விடயமே. மனிதர்கள் உட்பட அநேகமான அங்கிகள் இயற்கையில் கிடைக்கும் நீரை காலாகாலமாக நேரடியாக பாவித்து வந்திருந்தாலும் உடற்சுகாதாரம் பற்றிய அறிவின் வளர்ச்சி மற்றும் சனத்தொகை பெருக்கம் என்பனவற்றால் முறையான நீர் சுத்திகரிப்பு வசதிகள் நாகரீக உலகத்தில் இன்றியமையாதவையாகி உள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனம், சுத்தமான குடிநீர் என்பது “மனித வாழ்க்கையின் படிநிலைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, மனித வாழ்நாள் முழுவதுமான பருகுதலின் மூலம் ஆரோக்கியத்திற்கு எந்த குறிப்பிடத்தக்க ஆபத்தையும் விளைவிக்காத நீர்” என வரைவிலக்கணம் செய்கின்றது. இந்த வரைவிலக்கணத்தின் படி மனிதக் குடியிருப்புகளுக்கு சேய்மையில் இருக்ககூடிய, மனிதனால் மாசாக்களுக்கு உள்ளாகாத, “தூய நீர்நிலைகளும்” கூட “தூய குடி-நீர் நிலைகள்” அல்ல என்பது தெரிகின்றது. நீர் ஊற்றுகளில் காணப்படும் சில ஆபத்தான கனிமங்களின் மிதமிஞ்சிய நிலவுகை நீண்டகால நுகர்வில் விஷம் ஆக்கலாம். குறிப்பாக, 2004 இல் பங்களாதேஷை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு லட்சத்திற்கு சராசரியாக 126.1 பேர் நீர் மூலமான ஆசனிக்கு விஷமாக்களால் புற்று நோய்க்கு உள்ளாகிமை தெரியவந்தது.
அதீத நகரமயமாக்கல், சூழல் மாசாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் என்பன நீரை உபயோகிப்பதில் உள்ள இடர்களை அதிகரித்துள்ளன. சிறிய இடங்களில் நெருங்கி அமைக்கப்படும் மனித குடியிருப்புகளில் கழிவுநீர் முறையாக அகற்றப்படுவதில்லை. அத்துடன் இரசாயன கழிவுகளின் முறையற்ற அகற்றல் மற்றும் விவசாயத்தில் அசேதன உரங்களின் அதிகரித்த பயன்பாடு நில மட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதித்துள்ளன.
காலநிலை மாற்றத்தின் நீர்நிலைகள் மற்றும் நீர்வட்டத்தின் மீதான விளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல. Nature விஞ்ஞான பத்திரிகையில் 2017 இல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, காலநிலை மாற்றத்திற்கும் நீர் நிலைகளில் உள்ள நோய்க்கிருமிகள் அழிக்கப்படும் ஒரு இயற்கையான செயன்முறைக்கும் இடையிலான எதிர்மாறான தொடர்பை சுட்டிக் காட்டியிருந்தது. கடல் மட்ட அதிகரிப்பால் நிலக்கீழ் நீர்நிலைகள் உப்புத்தன்மையாகுவதற்கான சத்திய கூறுகளும் உண்டு.
இவற்றிற்கிடையில் நீர் சுத்திகரிப்புக்கான தேவை இன்னும் பல இடங்களில் பூர்த்தி செய்யப்படாமலே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 6.2.1a காட்டியின் படி, உலக சனத்தொகையின் 54% ஆனோரே பாதுகாப்பாக பராமரிக்கப்படும் நீர்ச்சுகாதார வசதிகளை பயன்படுத்துகின்றனர். 2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 10% ஆனார் கழிவு நீரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாய பொருட்களை உட்கொள்கின்றனர். முறையான பரிகரிப்பின் மூலம் கழிவுநீரை பாதுகாப்பான விவசாயத்திற்கு ஏற்றவாறு மாற்றக்கூடியதாக இருப்பினும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அக்கழிவு நீர் பரிகரிப்பு மேற்கொள்ளப்படுவது குறைவே என அந்த கணிப்பீடு கூறுகின்றது.
இந்த தரவுகளில் விளைவுகள் பாரதூரமானவை. சுத்திகரிக்கப்படாத குடிநீர் மற்றும் பாதுகாப்பற்ற நீர்ச்சுகாதாரத்தால் ஏற்படும் நோய்களில் டயரியாவால் மட்டும் வருடாந்தம் 829,000 பேர் மரணிக்கின்றனர். 2017 இல் 220 மில்லியன் பேர் கிருமி தொற்றுக்குள்ளான நீரின் காரணமாக ஏற்படும் ஷுஸ்டோசமயோசிஸ் (schistosomiasis) எனும் நீடித்த நோய்க்கு ஆளாகினர் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.
இச் சுகாதார பிரச்சனைகளுக்கும் மேலதிகமாக, சுத்தமற்ற நீரின் உபயோகத்தில் சமூக பொருளாதார விளைவுகளும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்ச்சுகாதார வசதிகள் ஒப்பீட்டளவில் குறைந்தளவிலேயே கிடைக்கின்றது. சிறுவர்கள் நோய்வாய்ப்படல், நீரை பெற்றுக்கொள்ள அதிக நேரம் செலவழிக்க வேண்டி ஏற்படல், அவர்களிடையே பாடசாலை வரவு குறைவடைதல், என அடுத்தடுத்து விளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக, வறுமைக்கும் நீர் சுகாதாரத்திற்குமான தொடர்பு வெளிப்படுகிறது. இதே போன்று சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளின் தேவைப்பாடு பெண்களால் அதிகளவில் உணரப்படுவதும் அதன்படி முறையாக செயல்படுத்தப்பட்ட நீர் வழங்கல், சுத்திகரிப்பு மற்றும் கழிவறை வசதிகள் சமூக பொருளாதார ரீதியில் பால்நிலை சமத்துவத்திற்கு முக்கியமாக அமையும் என்பதும் உண்மையே.

இதன்படி மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, முறையான நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவகற்றல் வசதிகளின் அவசியம் தெளிவாகின்றது. இதுவே ஐக்கிய நாடுகள் சபையில் நிலையான வளர்ச்சிக் குறிக்கோள் 6 (SDG 6) இற்கும் அடிப்படியாக உள்ளது.
அடிப்படை தேவையான நீர், மனித உடல், சமூக மற்றும் பொருளாதார ஆரோக்கியத்தோடு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பார்க்கும் பொது, அதனை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதிலேயே ஒரு சமூகம் என்ற ரீதியில் எமது வெற்றி மட்டுமல்ல, நீண்டகால நிலவுகை கூட தங்கியுள்ளது.
By Rtr. கபிலன் கணேசமூர்த்தி
Image credits:
References:
- Chen Y, Ahsan H. Cancer burden from arsenic in drinking water in Bangladesh. Am J Public Health. 2004;94(5):741-744. doi:10.2105/ajph.94.5.741
- Williamson, C.E., Madronich, S., Lal, A. et al. Climate change-induced increases in precipitation are reducing the potential for solar ultraviolet radiation to inactivate pathogens in surface waters. Sci Rep 7, 13033 (2017). https://doi.org/10.1038/s41598-017-13392-2
- Badaruddin, S., Werner, A. D., and Morgan, L. K. (2015), Water table salinization due to seawater intrusion, Water Resour. Res., 51, 8397– 8408, doi:10.1002/2015WR017098.
- Drechsel, P., Evans, A.E.V. Wastewater use in irrigated agriculture. Irrig Drainage Syst 24, 1–3 (2010). https://doi.org/10.1007/s10795-010-9095-5
- https://www.who.int/news-room/fact-sheets/detail/drinking-water
- Bosch, C. & Hommann, Kirsten & Rubio, Gloria & Sadoff, Claudia & Travers, L.. (2000). Water, Sanitation and Poverty. PRSP Sourcebook. (PDF) Water, Sanitation and Poverty
- Pouramin, P., Nagabhatla, N., & Miletto, M. (2020). A systematic review of water and gender interlinkages: Assessing the intersection with health. Frontiers in Water, 2. https://doi.org/10.3389/frwa.2020.00006

Leave a Reply