2019 நவம்பர் மாதம் சீனாவில் ஒருவருக்கு தொற்றிய கொரோனா வைரஸ் முழு உலகையும் ஸ்தம்பிதத்திற்கு கொண்டு வர சில மாதங்கள் கூட ஆகவில்லை. மனித இனம் என்ற வகையில் இந்த நோய் தொற்றை எப்படி எதிர்கொண்டோம் என பார்க்கப்போனால் சில சிந்திக்க வைக்கும் விடயங்கள் வெளிப்படுகின்றன.
2011 செப்டெம்பரில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் யாவரும் அறிந்த விடயமே. உலக அரசியல் போக்குகளை புரட்டி போடும் அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன. பல நூற்றாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய 2004 சுனாமி அனர்த்தத்தையும் யாரும் மறக்காமலிருக்க முடியாது. ஆனாலும் இந்த இரண்டும் கூட covid-19 நோய்த்தொற்றின் பரவலை போன்று ஒட்டுமொத்த உலக மக்களையும் ஸ்தம்பிக்க வைக்கவில்லை என்பதே உண்மை.
வைரஸை பற்றிய தகவல்கள் பரவ தொடங்க ,ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பொதுவான குழப்பங்கள், மனப்பயங்கள் ஏற்பட, குறுகிய ஒரு காலப் பகுதிக்காவது பொதுவான ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள மனித இனமாக நாம் ஒன்றாகினோம்.
ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவக்கூடிய உலகளாவிய நோய்தொற்று ஒன்றை எதிர்கொள்வது இதனை வாசிக்கும் பெரும்பாலானோருக்கு இதுவே முதல் தடவையாக இருந்திருக்கும்.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கூட்டமாக வாழ்தலின் பலனை அனுபவித்து அதனை அடிப்படையாக வைத்தே கூர்ப்படைந்து, பின் நாகரீகங்களை கட்டியெழுப்பிய மனிதனுக்கு அந்த கூட்டமே பெரும் ஆபத்தாக மாறுவதை இந்த நோய் தோற்றால் பார்க்கிறோம். ஆனால் அவ்வளவு இலகுவாக ஒரு வைரஸ் தொற்று எம்மை தனித்தனியே பிரித்து விடுமா என்ன? நேரடி சந்திப்புகள் தொற்றின் பரவல் அபாயத்தால் இயலாமல் போக மனித இடைத்தொடர்புகளின் முக்கிய ஊடகமாக இணையம் மாறியது. மனிதன் எப்போதும் இன்னொரு மனிதனை சார்ந்து இருப்பான் என்ற உண்மை இப்போதும் பொய்யாகவில்லை. இணைய வழி தொலைத்தொடர்பு பல வருடங்களாக இருந்தாலும், நேரடி இடைவினைகளாக தான் நிகழ வேண்டும் என இவ்வளவு காலம் கருத்தப்பட்டிருந்த பல நிகழ்வுகளுக்கு திறன்பேசிகள் மூலமாகவே வேலையை முடிக்கலாம் என்ற கண்டுபிடிப்பு இதன்போது நிகழ்ந்தது. கடந்த வருடம் இதே மாதம் கருந்தரங்குகள், விழாக்கள் ஏன் திருமணங்கள் கூட ஸூம் செயலி போன்று ஒரு மென்பொருள் மூலம் வழியாக நடத்தி முடிக்கலாம் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்? ஆனால் இந்த 8 மாதத்தில் இது மாறியதை என்னவென்று சொல்வது?
உணவு முதற்கொண்டு அத்தனை அடிப்படை தேவைகளையும் வீடு தேடி விநியோகிக்கும் அமைப்புகளின் டிஜிட்டல் மயமாக்கல், நகரங்கள் வழியே சமூக ஒழுங்கை பேண முக்கிய பங்காற்றின.
இத்தனை அசாத்திய கூட்டுமுயற்சிகள், கண்டுபிடிப்புகள் நூறாண்டுக்கு ஒரேமுறை வரும் இந்த அனர்த்தத்திலிருந்து மனித சமூகத்தின் நிலவுகையை கவசமிட்டு காத்திருக்கின்றன என்றால் இவற்றிற்கு பின்னாலுள்ள ஊக்குவிக்கும் காரணி என்ன என்ற கேள்வி எழுவது இயற்கையே.
இன்று வரை கூட ஒரு உலகளாவிய நோய்த்தொற்றின் பரவலுக்கு மத்தியிலும் ஒரு நாகரீகம் என்ற வகையில் எங்களால் நிலைத்திருக்க முடிகிறது என்ற உண்மை என்னை வியப்படைய வைக்கிறது. தன்னுடன் இருப்பவனின் நலனிலும் அக்கறை கொள்ளும் மனித நேயத்தை தவிர வேற என்ன இதற்கு காரணமாக அமைய முடியும்?
ஊரங்கிற்கு முன் அவசர அவசரமாக பொருள் வாங்கும்போது பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து வாங்கி வைப்பதுடன் தொடங்கியது இந்த மனித நேயத்தின் வெளிப்பாடு.
பல நாட்கள் முடங்கிப்போன உலகின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பல்கனிகளுக்கு வந்து விரக்தியை போக்க பாடிமகிழ்ந்த போது எங்கள் ஒவ்வொருவரிடத்திலுமுள்ள சக மனிதனுடன் ஒன்றித்து வாழும் சமூக உணர்வு வெளிப்பட்டது.
இணையத்தில் காணொளி மற்றும் நேரலை வழியாக நடனம் உட்பட்ட கலை வகுப்புகள் இலவசமாக பகிரப்பட்ட அதே நேரம் பல நூலகங்கள் தங்கள் நூல்களை ஈ-புத்தக வடிவில் தரவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டது கலை மற்றும் அறிவை பகிர்வதில் மனிதனுக்கிருந்த ஈடுபாட்டின் ஒரு சான்றே.
எந்தவொரு பிரச்சனையையும் ஒன்றித்து மனித இனத்தால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்த கொரோனா நோய்த்தொற்றின் பரவல் விட்டுச்செல்கிறது.
குடும்ப உறவுகளின் அருமை தெரிய இந்த முடக்கம் சந்தர்ப்பம் வழங்கியது. ஒரு நாளிற்கு எட்டிலிருந்து பன்னிரண்டு மணித்தியாலங்கள் வரை அலுவலகத்தில் வேலை பார்த்து, பின் மீதி நேரத்தில் உடற்சோர்வையும் மன அழுத்தத்தையும் சமாளிக்க திணறுவதால் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட வழியில்லாது பலர் இருந்த வேளை பெரும்பாலான அலுவலக வேலையை வீட்டிலிருந்தே செய்து முடிக்கலாம் என்ற உண்மை வெளிப்பட்டது. இதன் விளைவாக தொழிநுட்ப ஜாம்பவான் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் நிரந்தரமாக தமது ஊழியர் படையின் பெரும்பகுதியை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்திருக்கின்றன.
அதே வேளை உலக பொருளாதாரங்களின் வீழ்ச்சியுடன் வேலையை இழக்க நேர்ந்தவர்களின் பாட்டையும் தட்டிக் கழிக்க முடியாது.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன, பரீட்சைகள் பிற்போடப்பட்டன, விழாக்கள் பிற்போடப்பட்டன, பண்டிகைகள் ரத்துசெய்யப்பட்டன, புதிய வியாபார முயற்சிகளுக்கு வழியில்லாமல் போயின, பல வணிகங்கள் வியாபாரத்தை இழந்து மூடின, இவ்வாறு இன்றைய சமூகத்தில் மனித வாழ்வில் அத்தனை அம்சங்களுக்கும் இடமில்லாமல் போனது.
“இயந்திரமய வாழ்வு” எனும் பதம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இயந்திரமய வாழ்வால் விரக்தியாகி இது மாறாதா என கனவு கண்ட பலரும் இருப்போம். இதற்கு எந்த குறும்புக்கார கடவுளோ புன்முறுவலுடன் செவிசாய்த்தது போல வந்தது கொரோனா வைரஸ். இன்றைய வாழ்வென்ற இயந்திரம் நின்றது உண்மையே. ஆனால் அதற்கு பதிலாக கிடைத்த மன அழுத்தம் உள்ளிட்ட உள ஆரோக்கிய பிரச்சனைகள், குணமாகினாலும் உடலின் நீண்டகால ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய, குணமாகாதவர்க்கு மரணத்தை தரும் ஒரு நோய், தப்பி பிழைத்தாலும் கூட பொருளாதார சிக்கல்களால் வாழ்க்கையில் பின்னடைவு என இந்த நோய்த்தொற்றின் விளைவுகள் பல வேண்டத்தகாதவையே.
அதேவேளை ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டிலிருந்த போது, தம் வாழ்வை பற்றி நினைக்க, இறந்தகாலத்தை மீட்டுப்பார்க்க, எதிர்காலம் எவ்வாறு அமையும் என கனவு காண்பதற்கு பலருக்கு நேரம் கிடைத்ததால் சில மகிழ்ச்சியூட்டும் போக்குகள் வெளிப்படவே செய்தன.
இயந்திரமய வாழ்விலிருந்து தம்மை விடுவித்த பலருக்கு தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றியமைக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. புதிய பொழுது போக்குகளை முயன்று பார்த்தல், கலை மற்றும் புத்தாக்க ஈடுபாடுகளை வளர்த்தல், அதிலும் புதிய தொழில்களில் இறங்குதல் ஆகியனவும் நடந்தேற இந்த நோய்த்தொற்றால் ஏற்பட்ட முடக்கம் வழிவகை செய்தது.
நேரடி சந்திப்புகள் பலவற்றை இணையத்திற்கு இடம்மாற்றி, அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடிய ஆளிடைத்தொடர்புகளின் தன்மையை மாற்றி, அதனிடையே தானியங்கியாக சென்ற சராசரி மனிதனின் வாழ்க்கைப்பாதையில் திருப்பத்தை ஏற்படுத்தி நிச்சயமற்ற ஆனால் சுவாரஷ்யமான எதிர்காலத்திற்கு வழி செய்து செல்கின்றது கொரோனா தொற்று.
அடுத்து என்ன? உலகின் பல இடங்களிலும் இன்னும் கொரோனாவின் பரவலின் வீரியம் குறையவில்லை. இனிவரும் காலங்களில் சாதாரண தடிமன், இருமலை போன்று கொரோனா தொற்றும் மனிதர்களிடையே இருக்கக் கூடிய ஒரு தொற்றக்கூடிய நோயாகவே காணப்படும் என்ற கருத்தும் விஞ்ஞானிகளிடையே காணப்படுகிறது. குறுகிய காலத்தில் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படலாமென்றாலும் அது செயற்பாட்டிற்கு வர குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் தேவைப்படலாம்.
அது வரை மனித சமூகமென்ற வகையில் நாம் செய்யக்கூடியது, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, கொரோனாவுடன் சேர்ந்த ஒரு மாறிய உலகத்தை எதிர்கொள்ள தயாராவதே.
Written by – Rtr. Cabilan Ganeshamoorthy ( கணேசமூர்த்தி கபிலன் )
T.Yugan says
உண்மையில் இப்பதிவு மிகவும் பிரயோசனமாக இருந்தது இவ்வாறான கல்வி தொடர்பான விடயங்களை மேலும் பதிவிடுங்கள்.