
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட ரொடரக்ட் க்லப்பின் வருடாந்த செயற்த் திட்டங்களில் ஒன்றே “அகங்கார”.பின்தங்கிய கிராமப்புர பாடசாலையொன்றின் க.பொ.த சாதாரண தர மாணவ மாணவிகளின் கற்றலை ஊக்குவிப்பதை அடிப்படையாக கொண்ட “அகங்கார” முதலாம் வருட மாணவர்களால் முன்னின்று நடத்தப் படுவதே வழமை.
புதிய ஒரு அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இச்செயற்றிட்டத்தில் பங்குபெற பெயரை பட்டியலில் சேர்த்தேன். க.பொ.த சா/த பரீட்சை, பின் இயற்பியல் கற்கை நெறி என கணித, விஞ்ஞான பாடங்களில் கவனத்தை செலுத்தி கொண்டிருந்த எனக்கு மொழிப் பாடம் ஒன்றை கற்பித்தல் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.
கற்றலில் முழு ஈடுபாட்டை காட்டும் முதல் வரிசை மாணவர், தன்னால் முடியுமானதை செய்துகொண்டு தம் வேலையை பார்க்கும் நடுநிலை மாணவர், கற்றலை பற்றியே கவலைப்படாத குழுவினர் என சாதாரண எந்த வகுப்பையும் போல இல்லுகோவிட்ட கனிஷ்ட வித்தியாலயத்தின் பதினொன்றாம் வகுப்பும் இருந்தது. இடைவேளை உட்பட ஏழு மணித்தியாலங்களுக்கு இவ்வகுப்பு மாணவரை கவனங்கலைய விடாது கற்பித்தல் இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால் அன்று ஒத்துழைத்த மாணவர்களால் அது சாத்தியம் பெற்றது. ஆர்வத்துடன் சந்தேகங்கேட்கும் மாணவரிற்கு உதவசென்றால் சில கேள்விகள் எம்மையே குழப்பும். அக்கேள்விகளுக்கு தீர்வை தேடி அதை மாணவருக்கு விளக்கி நாங்களும் கற்றல் யாவும் மறக்கமுடியாத நிகழ்வுகள்.
அம்மாணவரின் கற்றலில் சிறிதளவேனும் மாற்றத்தை செய்த திருப்தியை அகங்கார அளித்தது. அதேவேளை 11ஆம் ஆண்டு மாணவரிற்கு கற்றலில் உதவ சென்ற நான் கொடுத்த அளவிற்காவது பலனை அனுபவங்கள் என்ற வடிவில் பெற்றதாகவே உணர்ந்தேன். என்றும் அகழாத நினைவுகளால் “அகங்கார” செயற்திட்டம் என் மனதை அலங்கரித்து செல்கிறது.
கணேசமூர்த்தி கபிலன்

Leave a Reply